நடிகர் சங்கம் குறித்து தானஅ தெரிவித்த கருத்துக்காக ரசிகர்களை விட்டு நடிகர் விஷால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் சுரேஷ் காமாட்சி அளித்துள்ள புகாரில், “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு எதிரான அணியில் துணைத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் முன்விரோதமோ, பகையோ இல்லை. சமீபத்தில் நடிகர் சங்க கட்டடத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்குக் காரணம், அந்த சங்க கட்டடம் கட்டப்படுவதில் இருந்த ஆக்கிரமிப்பு முறைகேடுகள். இதைச் சுட்டிக்காட்டி, நடிகர் சங்கத்தின் செயல்பாட்டை விமர்சித்து எனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிந்தேன். மிக நாகரீகத்துடன் அக்கருத்தை பதிவிட்டிருந்தேன்.
ஆனால் இதனை தனக்கு எதிரான விஷயமாகக் கருதிய விஷால், தனது ரசிகர்களைத் தூண்டிவிட்டு, அவர்களுக்கு என் தொலைபேசி எண்ணைத் தந்து மிரட்டுகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பாளராக இருக்கும் ராபின் மற்றும் விஷால் ரசிகர் மன்றத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் கமலக்கண்ணன் ஆகிய இருவரும், விஷாலின் ரசிகர் ஒருவர் என்னை ரவுடித்தனமாக மிரட்டும் குரல் பதிவை வாட்ஸ் ஆப் குழுவில் பதிவு செய்திருக்கிறார்கள்.
விஷால் தூண்டுதலின்பேரில், அவருடன் இருக்கும் நபர்களே இந்த மிரட்டலை எனக்கு விடுத்துள்ளதாக நான் கருதுகிறேன்” என்று சுரேஷ் காமாட்சி புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட வட பழனி காவல் நிலைய ஆய்வாளர், விசாரணை மேற்கொள்வதாக சுரேஷ் காமாட்சியிடம் உறுதி அளித்தார்.
இது குறித்து சுரேஷ் காமாட்சி,, “விஷாலின் ரசிகர்கள் என்ற பெயரில் எனக்கு போன் செய்து எச்சரித்தவர்களை நினைத்தாலே காமெடியாக உள்ளது. தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட்ட விஷாலுக்கு, விமர்சனங்களையும் எதிர்க் கருத்துக்களையும் தாங்கிக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏதோ மூன்றாம் தர தாதா போல, தன் ரசிகர்களை விட்டு தொல்லை தருவது கீழ்த்தரமானது. இது போன்ற செயல்களை விஷால் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே காவல்துறையில் புகார் செய்தேன்” என்று தெரிவித்தார்.