பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் கைபேசியைப் பயன்படுத்தி குஜராத் மாநில பாஜக யுவமோர்ச்சா தலைவரை மிரட்டி பணம் மற்றும் வைரம் பறிக்க முயற்சிசெய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ்வி சூர்யாவின் செயலாளர் பானு பிரகாஷ், பெங்களூரு பனசங்கரியில் உள்ள தெற்கு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஜூலை 1 ஆம் தேதி, BJYM குஜராத் பிரிவு தலைவர் பிரசாந்த் கோரட்-டுக்கு, தேஜஸ்வி சூர்யாவின் மொபைல் போனில் இருந்து பணம் மற்றும் வைரம் கேட்டு அழைப்பு வந்ததுள்ளது.

பிரசாந்த் கோரட் மீண்டும் அழைத்தபோது, ​​தேஜஸ்வி சூர்யா பிஸியாக இருந்ததால், குஜராத் பிஜேஒய்எம் யூனிட் தலைவர் பிரசாந்த் கோரட், தன்னிடம் இதுகுறித்து விசாரித்தபோது பணம் மற்றும் நகை கேட்டு இந்த எண்ணில் இருந்து மிரட்டல் வந்தது தெரியவந்தது என்று புகாரில் பானு பிரகாஷ் கூறியுள்ளார்.

அப்படி எந்த அழைப்பும் செய்யவில்லை என்றும் மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை என்று தேஜஸ்வி சூர்யா தரப்பு தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், அந்த சமயத்தில் மொபைல் போனை அடையாளம் தெரியாத நபர் யாரோ திருடி இதுபோன்ற மிரட்டல் அழைப்பு விடுத்துள்ளதாகவும் பின்னர் அந்த மொபைலை சந்தில் போட்டுவிட்டு சென்றதாகவும் பானுபிரகாஷ் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 66(c) மற்றும் 66(d) மற்றும் IPC பிரிவு 419 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்ட நபர் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.