பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது!
பிளாஸ்டிக் அரிசி புழங்குவதாக வரும் செய்திகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
அதே நேரம், ‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை அயனாவரம் பணிமனை கேண்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அயனாவரம் பணிமனையில் உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் கேண்டீனில் பயன்படுத்தப்படுவது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்று உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவர் கதிரவன் தெரிவித்தார்.
உணவுப் பொருட்களில் கலப்படம் இருந்தால் அது குறித்து 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கடந்த மே மாதம் அரசு அறிவித்தது. அதே எண்ணில் பிளாஸ்டிக் அரிசி குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.