வாஷிங்டன்

கொள்ளை நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவை பரப்பியதாகச் சீனா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 20 லட்சம் கோடி டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகெங்கும் பரவி உள்ளது.   இதனால் உலக மக்கள் அனைவரும் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.   இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   யாரும் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 61 பேரைப் பலி வாங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  அமெரிக்கப் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்து இழப்பு ஏற்பட்டுள்ளது.  அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உலகம் முழுவதும் கடும் இழப்பு உண்டாகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த பஸ் போட்டோஸ் மற்றும் ஃப்ரீடம் வாட்ச் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் சீன அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.   இதில் அவர்கள் சர்வதேச ஒப்பந்தத்தை மீறி சீன அரசு மக்களைப் பெருமளவில் கொல்ல கொரோனா வைரஸ உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வழக்கு மனுவில் வுகான் நகரில் உள்ள நச்சு உயிரியல் நிறுவனத்தில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டு வெளியேறியதால் அந்நகரம் பாதிக்கப்பட்டு அது உலகெங்கும் பரவி உலக மக்கள் மாண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி இந்த வைரஸ் பரவத் தொடங்கியதைச் சீன அரசு மறைத்ததற்கு ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை வெளியே சொல்ல முயன்ற சீன மருத்துவர்களைக் கைது செய்து சிறை வைத்துள்ளதாகவும் ஓரூ  சிலர் மாயமாகி உள்ளதாகவும் இந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.   சீன அரசு உருவாக்கிய கொரொனா வைரசால் தங்கள் நிறுவனம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதுமே பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதால் சீனா 20 லட்சம் கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.