சென்னை: பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு – ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் முதலமைச்சராக கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்ற தளபதி M. K. Stalin அவர்கள் எந்த தரப்பிலிருந்து கோரிக்கை வைத்தாலும் அதை கனிவுடன் பரிசீலித்து , உடனுக்குடன் முடிவுகளை எடுத்து தீர்வு கண்டு வருகிறார். இத்தகைய செயல்பாட்டின் மூலம் கட்சி எல்லைகளை கடந்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக கருதப்படுகிற பத்திரிகையாளர்களுக்காக கொரோனா தொற்றால் உயிரிழந்த அவர்களது குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும், சிறப்பு ஊக்கத்தொகை ரூ.3000 ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளதை பத்திரிகையாளர்கள் மனம் திறந்து பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காலத்தில் களத்திற்கு சென்று செய்தி சேகரிக்கும்போது கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்திருப்பதைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் அவர்கள் இத்தகைய முடிவுகளை அறிவித்துள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
அதேநேரத்தில் அரசு அங்கீகார அட்டை, மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கப்பட்ட அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒன்றை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் உதவித்தொகை வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு மிகப்பெரும்பாலான பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினருக்கு பயனளிக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் பத்திரிகையாளர்களிடம் இருக்கிறது. அந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அரசு அங்கீகார அடையாள அட்டை என்பது நிறுவனத்தில் 12 பேருக்குள் தான் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் பொறுப்புகளில் இருப்பவர்களாக உள்ளனர். ஆனால் இந்த அங்கீகார அடையாள அட்டை இல்லாமல்தான், களத்துக்குச் செல்லுகின்ற, நாள் தோறும் பணியாற்றுகின்ற பெரும்பாலான பத்திரிகை மற்றும் ஊடகப் பணியாளர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்திருக்கும் உதவித்தொகை சென்றடைய வேண்டும்.
இதற்கு நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை மூலமோ, பாரம்பரியமிக்க சென்னை பத்திரிகையாளர் சங்கம் (எம்.யு.ஜெ.), சென்னை நிருபர்கள் சங்கம் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பத்திரிகையாளர் நலனுக்காக பாடுபட்டு வருகிற சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ள குழுவின் மூலமோ உதவித்தொகை வழங்கலாம். இதேபோன்று கொரோனா தொற்றால் உயிரிழந்த அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிற பத்திரிகையாளர் நலத்திட்ட உதவிகள் முழுமையான பலனை தரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காலத்திலும் உயிரை துச்சமென நினைத்துப் பணியாற்றி வரும் அனைத்துப் பத்திரிகையாளர்களும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.