தேசிய பேரிடர் காரணமாக உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிந்துரைக்க பேரிடர் மேலாண்மை சட்டம் விதி எண் 12 ல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது.
இந்த விதியின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுநாள் வரை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கொரோனா பாதிப்பிற்கான இழப்பீடு குறித்து எந்த வரையறையும் மேற்கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இன்னும் 6 வாரங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கவுரவ் குமார் பன்சல் மற்றும் ரீபக் கன்சல் ஆகியோர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கினால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்று மத்திய அரசு வாதாடியது. மேலும், முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும் ஒரு பெருந்தொற்றுக்கு இழப்பீடு வழங்கியதாக முன்னுதாரணம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது.
இழப்பீடு தவிர, இழப்பைச் சந்தித்த குடும்பங்களின் மறுவாழ்வுக்கு வழி செய்யும் திட்டம் குறித்து ஆலோசிப்பதே அரசின் நிதி சிக்கலை தீர்க்கும் என்றும் கூறியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “எந்த ஒரு நாடும் அல்லது மாநிலமும் அபரிமிதமான நிதியை வைத்திருப்பதில்லை, சூழ்நிலையையும் கள நிலவரத்தையும் ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் செயல்படவேண்டும்.
இழப்பீடாக இவ்வளவு தொகை வழங்கவேண்டும் என்று நாங்கள் கூற விரும்பவில்லை. அரசுக்கும் பல்வேறு கடமைகள் இருப்பதால் அரசும் இதை நிர்ணயிக்க முடியாது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த விவகாரத்தில் தனது கடமையை செய்ய தவறிவிட்டது.
எவ்வளவு இழப்பீடு வழங்கவேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கே உள்ளது, இன்னும் 6 வாரங்களில் இழப்பீடு வழங்குவது குறித்த வழிமுறைகளை தெளிவுபடுத்துவதோடு, இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான எளிமையான நடைமுறையையும் வெளியிடவேண்டும்” என்று தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.