சென்னை: சென்னையில் நகர் பகுதிகளில் உள்ள கிணறுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அவற்றை கலைக்கண்ணுடன் சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி இறங்கி உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை பெரு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா பரவலுக்கு முன்னதாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதைய சூழலில், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் கிட்டத்தட்ட மூன்றே கால் லட்சம் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2.57 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் கட்டமைப்பு நன்றாக உள்ளதாக கண்டறியப்பட்டது.

மேலும் 26 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந் நிலையில் சென்னை மாநகராட்சியானது அடுத்தக் கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நகர்பகுதிகளில் உள்ள சமுதாய கிணறுகளை பாதுகாக்கும் அம்சமாக சேதம் அடைந்துள்ள கிணறுகளை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக, கிணறின் வடிவமைப்பை கலைநயத்துடன் அமைக்கும் பணிகளில் மாநகராட்சி இறங்கி உள்ளது. கலைநயம் மிக்க பாத்திரங்கள் போன்றும், காபி கோப்பைகள் போன்றும் கிணறுகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.

இன்னும் சில கிணறுகள் கப் அன்ட் சாசர் போன்றும், தர்பூசணி பழம் போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பான போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.