பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 1,843 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: துமாகூரில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். அதை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், மாவட்ட அதிகாரிகளுக்கு அது கடினமான உள்ளது என்றார்.
முன்னதாக, முதலமைச்சர் எடியூரப்பா, கர்நாடகாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று கூறி இருந்தார். இப்போது அமைச்சர் மதுசாமி அதற்கு மாறுபாடான கருத்தை கூறி உள்ளார்.