சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு. மூத்த கம்யூனிஸ்டு கட்சியின் பெண் உறுப்பினர் வாசுகி தலைமையில் மாதர் சங்கம் போராட்டம் நடத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சியில், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில், காவல்துறையினரின் மெத்தனம் காரணமாக, கடும் வன்முறை ஏற்பட்டு, பள்ளி தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்னும் பள்ளி முழுமையாக திறக்க தமிழகஅரசு மறுத்து வருகிறது. மேலும், போராட்டத்தின்போது கடுமையான சேதங்களை ஏற்படுத்தி, வாகனங்களை தீ வைத்து எரித்த மக்கள் அதிகாரம் அமைப்பு உள்பட சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்கிறது.
இந்த நிலையில், இன்று ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், இன்று சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்திற்கு வரும் பெண்களை முன்கூட்டியே காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் டிஜிபி அலுவலகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மாதர் சங்கத்தின்ர், சென்னை ஆர். கே. சாலையில் உள்ள கல்யாணி மருத்துவமனை அருகே திடீரென 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சாலையானது முதல்வர் தலைமைச்செயலகம் வரும் வழி என்பதால், காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண் போலீசாரைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70 பெண்களை வலுகட்டாயமாக கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்த நிர்வாகி வாசுகி, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு விசாரணையை அரசு துரிதப்படுத்த வேண்டும். மாணவியின் மரணத்தை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் பதிந்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்யவேண்டும். மேலும் மாணவியின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பெண்கள் அமைப்பினரின் சாலை மறியல் போராட்டம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.