மதுரை: மறைந்த மூத்த அரசியல் தலைவர் தா.பாண்டியனின் உடல், மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தா.பாண்டியன் அவதிப்பட்டு வந்தார். கடந்த 24ம் தேதி உடல்நிலை மோசமடைந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று தா.பாண்டியன் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள இல்லத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், அமைச்சர் ஜெயக்குமார், உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, நேற்று இரவு அவரது உடல் மதுரை அருகே உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தா.பாண்டியனின் உடல், உசிலம்பட்டி அருகேயுள்ள கீழ் வெள்ளைமலைப்பட்டியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தா.பாண்டியனின் மறைவை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.