அரியலூர்:

பொன்மராவதியில் இரு தரப்பினருக்கு இடையே நேற்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து, இன்னும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ஒரு சமூகத்தினர் குறித்து இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் இழிவாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பல இடங்களில் சாலையில் குறுக்கே மரத்தை வெட்டிப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், அரியலூர் மாவட்டத்தில் சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியார் சிவதாஸ் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நேற்று வன்முறை தொடர்ந்து பொன்னமராவதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், வாட்ஸ் அப்பில் தங்கள் சமூகம் குறித்து மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் இழிவாக பேசியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் திறந்திருந்த  கடைகள் மற்றும் வாகனங்களை அடித்துநொறுக்கினர்.  இதன் காரணமாக  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, பனையப்பட்டி, நல்லூர், தேனிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை எஸ்பி.செல்வராஜ் தலைமை யில்  மேலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பொன்னமராவதி உள்பட அந்த பகுதிகளில்  குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இந்நிலையில் அசாம்பவிதங்கள் ஏதும் ஏற்படமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமாரவதி உட்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பொன்னமராவதி உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்த புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி,  சமூகவலைதளங்களில் இழிவான, தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,   புதுக்கோட்டை மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்றும் கூறினார்.