சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டு முதல் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளின்போரத பொது வினாத்தாள்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதன்படி, காலாண்டு, அரையாண்டு உள்பட ஆண்டிறுதி தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தற்போதுள்ள பள்ளிக்கல்வி நடைமுறையில், ஆண்டு இறுதித்தேர்வுக்கு மட்டுமே பொது வினாத்தாள் வழங்கப்பட்டு வருகிறது. 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மட்டுமே அனைத்து தேர்வுகளுக்கும் பொதுத்தேர்வு வினாத்தாள்  வழங்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதாவது, 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகள் அந்தந்த பள்ளிகள் மற்றும் மாவட்ட அளவில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. அதாவது, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டி.ஐ.இ.டி.) வாயிலாக விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வினாத்தாள் தயாரிக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு மற்றும் ஆண்டு இறுதி பொதுத்தேர்வுகளக்கு  பொது வினாத்தாள்கள் வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் சென்னை உள்பட  12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக  நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் செப்டம்பரில் நடைபெற உள்ள காலாண்டு தேர்வில் அமல்படுத்தப்பட உள்ளது.  தன்படி, மாநில அளவில் தயாராகும் பொது வினாத்தாள்கள் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (டி.என்.எஸ்.சி.இ.ஆர்.டி.) வந்து சேரும். பின்னர், அங்கிருந்து அந்தந்த மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்றாற்போல், வருகிற 2-ந் தேதிக்குள் தமிழ், ஆங்கிலத்தில் 2 செட் வினாத்தாள்களை தயாரிக்க, தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கற்றல் திறன் மோசமாக இருப்பதாக,  தேசிய சாதனை ஆய்வு மற்றும் மாநில அளவிலான சாதனை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்குகாரணமா ஆசிரியர்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் முடிவை ஒரே சீராகவும், சரியாகவும் மதிப்பிடும் வகையில் பொதுத் தேர்வு வினாத்தாள் முறை கொண்டு வரப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்,.