எப்படியெப்படி மாற்றி பொருத்திப்பார்த்தாலும் சிலருடைய வாழ்க்கை மட்டும் அதிசயித்தக்க வகையில் தெரியும்.. அப்படிப்பட்ட அபூர்வ அரசியல்வாதிகளில் ஒருவர்தான் திமுக தலைவர் கருணாநிதி..
அவர் பிறந்து இளைஞனாக அரசியல் பேசிக்கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தி, நேரு. சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோரெல்லாம் மாபெரும் தலைவர்களாக களத்தில் திகழ்ந்தார்கள். நேரு பிரதமராக இருக்கும்போது கருணாநிதியும் தொடர்ந்து ஏழு ஆண்டுக்கள் எம்எல்ஏவாக இருந்தார்.
நேருவின் பேரனுக்கே பேரன் பேத்திகள் பிறந்துவிட்ட நிலையில், எந்த தேர்தலிலும் தோற்காமல் 61 ஆண்டுகள் கழித்து இன்றும் எம்எல்ஏவாக இருக்கிறார்.. நிச்சயம் இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு விந்தையே. எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம், கடுமையான உழைப்பு..உழைப்பு உழைப்பு என்ற தாரக மந்திரம்தான். விடியற்காலை மூன்றரை மணிக்கு ஆரம்பமாகும் அவரின் தினப்பொழுது, அன்று நள்ளிரவு வரை எண்ணற்ற பணிகளை செய்து முடிக்காமல் போகவே போகாது..
14 வயதில் பள்ளி மாணவனைக்கடந்து, கையேடும் நடத்தும் இலக்கிய இளைஞனாய், பத்திரிகையில் உதவிஆசிரியராய், பட்டையை கிளப்பிய எழுத்தாளனாய், சினிமாவில் வசன கர்த்தாவாய் எல்லா வற்றிற்கும் மேலாக துடிப்பான அரசியல்வாதியாய், கருணாநிதி வளர்ந்த வேகம் மிகமிக அபரிதமானது..
படிப்பு, பணம், வசீகர முகம் என எந்த சூப்பர் ஸ்பெஷாலிடி அம்சமும் இல்லாமல் அரசியல் வரிசையில் கடைக்கோடியில் நின்ற அவர், எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். ஈவிகே சம்பத், நெடுஞ்செழியன் என எம்.ஏ. பட்டம் பெற்ற படிப்பாளி தலைவர்களால் நிரம்பி வழிந்த அறிஞர் அண்ணாவின் திமுக பட்டாளத்தில், பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத கருணாநிதி படைத்த எழுத்துச்சாகசங்கள் கொஞ்ச நல்லமல்ல..
ஆனானப்பட்ட அண்ணாவால்கூட தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று படங்களுக்குமேல் வசன வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் கருணாநிதியோ, தன் வசனங்களால் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரண்டு மாபெரும் திலகங்களையே மேலே ஏற்றிவிடுவதில் முக்கிய பங்கு வகித்தார்.
மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, பராசக்தி, மலைக்கள்ளன், மனோகரா, என அது ஒரு பெரிய பட்டியல்.. கருணாநிதியின் வசனங்களுக்காக அன்றும் பேசப்பட்ட படங்கள், இன்றும் பேசப்படும் பொக்கிஷங்கள்…
‘’காட்டில் மானை புலி வேட்டையாடுகிறது மனிதனி காதல்வாழ்க்கையில் புலியை மான் வேட்டையாடுகிறது’’
‘’இரவில் பௌணர்மிதான் அழகா, ஏன் அமாவாசை அழகாக இருப்பதில்லையா’’?
என்னை அவ்வளவு சுபலத்தில் ஏமாற்றிவிடமுடியாது என்று சொல்லும் காதலியிடம், ‘’கொஞ்சம் சிரமப்பட்டால் ஏமாற்றிவிடலாம் என்கிறாய்’’ என காதலன் அடிக்கும் நக்கல்.
ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்,
‘’மனோகரா, பொறுத்தது போதும் பொங்கியெழு’’
‘’அழைத்துவரப்படவில்லை..இழுத்துவரப்பட்டிருக்கிறேன்’’
1950களில் இளைஞர்கள் வாயில் இதுபோன்ற கருணாநிதியின் சினிமா வசனங்கள் தினமும் பலமுறை பேசப்பட்டே தீரும்.. அதனால்தான் பல கதாநாயகர்களின் சம்பளத்தைவிட வசனகர்த்தா கருணாநிதியின் சம்பளம் அதிகத்திற்குபோய் நின்று ஆடிய ஆச்சர்யமான கட்டம் அது… எம்ஜிஆரின் மலைக்கள்ளன் படம் கருணாநிதியின் வசனத்திற்காகவே காத்திருந்த மெகா பட்ஜெட் படம்.. அந்த காத்திருப்புக்கு வஞ்சகமே இல்லாமல் வசனங்களை வாரிவாரிக்கொடுத்து காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கினார் கருணாநிதி.
‘’நீ படிப்பில் மேதையாக இருக்கலாம், பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் இந்த மூன்றையும் பாதுகாக்கக்கூடிய கண்ணியம் உன்னிடத்தில் இல்லை’’ – தகுதியற்ற ஆண்மையிடம் தகுதி கொண்ட பெண்மை எப்படி சீறி, வார்த்தைகளில் ஒரேயடியாய் அடித்து நொறுக்கும் என்பதை 1963ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சிவாஜியின் இருவர் உள்ளம் படத்தைக்காட்டிலும் வேறொரு சிறப்பான உதாரணத்தை காட்டிவிடமுடியாது. படம் முழுக்க அப்படியொரு வீச்சை காட்டியிருந்தார் கருணாநிதி.
அதனால்தான் படத்தின் தயாரிப்பாளர் ஜாம்பவான் எல்வி பிரசாத், ஏற்கனவே கொடுத்த சம்பளத்தொகையோடு கருணாநிதிக்கு மீண்டும் ஒரு முறை போனசாக அதே அளவு தொகையை கொடுத்து நன்றியை தெரிவித்தார்.
நாடகம், பத்திரிகை, சினிமா ஆகிய மூன்றிலும் பல ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வெற்றிகரமாய் உச்சத்தில் ஏறிவிட்ட கருணாநிதிக்கு அரசியல் ஒன்றும் அவ்வளவு சிக்கலாக. தெரியவில்லை..
அரசியல்வாதிகளின் ஒரே பிரம்மாஸ்திரமான பேச்சாற்றலை எங்கே எப்படி பயன்படுத்தவேண்டும் என்று சூட்சுமத்தை கண்டுபிடித்து அதை வெற்றிகரமாய் நிகழ்த்தியும் காட்டினார்.
குருமார்களான, பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு திராவிட தலைவர்கள் பெரும்பாலும் மேடைப்பேச்சை வெகு சாதாரணமாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் கருணாநிதியோ அதில் புதிய டிரெண்ட்டையே உருவாக்கினார்.
இன்றைக்கு ஹீரோ அறிமுகத்திற்கு எப்படி படங்களில் மாஸ் ஓப்பனிங் சீன் வைக்கிறார்களோ அதை அந்தக்காலத்திலேயே பொதுக்கூட்ட மேடைகளில் ஆரம்பித்துவைத்தவர் கருணாநிதி, மைக்கை பிடித்ததும் அவர்களே, இவர்களே என விளித்துவிட்டு கடைசியில் மேடைக்கு எதிரே உள்ளவர்களை பார்த்து, ‘’ என் உயிரினும் மேலான…’’ என்று சொல்லிவிட்டு நிறுத்துவார்… கூட்டத்தினரின் முழக்கமும் விசிலும் விண்ணைப்பிளக்கும். ஆரவாரம் அடங்குவதறகு சில நிமிடங்களாவது பிடிக்கும்.. எதற்காக? அடுத்து அவர் சொல்லப்போகும் ‘’கழக உடன்பிறப்புகளே’’ என்ற மேஜிக் வார்த்தைகளுக்காக..
அதிமுக என்ற தனிக்கட்சி கண்ட எம்ஜிஆர்கூட, இந்த டிரெண்ட்டில் பயணித்தே ‘’என் ரத்தித்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’’ என மேடைப்பேச்சை ஆரம்பித்தார்.
மேடைப்பேச்சில் மட்டுமின்றி அண்ணா தலைமையில் இயங்கிய திமுகவில், முக்கியமான தருணங்களிலெல்லாம் களத்தில் அசத்துவதில் கருணாநிதியின் வழியே, தனித்துவமாக இருந்தது. பண நெருக்கடியா?, ‘போடு ஒரு நாடகத்தை திரட்டு நிதியை’’ என்பார். இன்றைக்கு பணம் கொடுத்தால்தான் பார்க்கமுடியும் என்றுள்ள டீவி பே சேனல்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் திராவிட இயக்கத்தலைவர்கள். தங்கள் மேடைப்பேச்சுக்கே விலைவைத்து நிதி திரட்டி அதில் கட்சியை வளர்ததவர்கள்.. அப்படிப்பட்ட தளகர்த்தர்கள் வரிசையில் முன்னிலை வகித்தவர் பேச்சாற்றல் கொண்ட கருணாநிதி அவர்கள்.
எதிர்ப்பது என்று வந்துவிட்டால் எவ்வளவு பெரிய தலைவரையும் பேச்சில் துவம்சம் செய்துவிடுவார். அண்ணா அவர்கள் கொஞ்சம் தயங்கி தயங்கி நின்றபோதுகூட நாடு முழுவதும் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சியான காங்கிரசையும் அதன் தலைவர்களையும் வறுத்தெடுக்க கருணாநிதி பயந்ததேயில்லை.
அதேபோல நேரத்திற்கு ஏற்ப எப்படி காய்நகர்த்தவேண்டும் என்பதில் கருணாநிதி மிகவும் சமர்த்தர். அண்ணா மறைவுக்கு பிறகு, முதலமைச்சர் நாற்காலியில தன்னை ஏற்றிக்கொண்டவிதம், எமாந்துபோன நாவலர் நெடுஞ்செழியன் வகையறாக்களைப்பார்த்து, ‘’ சீனியாரிட்டி இருந்தால் மட்டும் போதாது, அரசியலுக்கான சமயோசித புத்தியும் தேவை’’ என்று சொல்லாமல் சொல்லியது.
அதேபோல எந்த நேரத்தில் மத்திய அரசிடம் நெருக்கடி கொடுத்தால் பலன்களை பெறலாம் என்றும் நன்கு தெரிந்துவைத்திருந்தார். சுதந்திர தினத்தன்று அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்தான் கொடியேற்ற உரிமை தரவேண்டும் என்று மாநில உரிமையை முன்நிறுத்தி செக் வைத்தபோது பிரதமர் இந்திராகாந்தியால் தவிர்க்கவேமுடியவில்லை.. மறுத்தால் நாடே ஒன்று திரளும் என்ற நிலையை கருணாநிதி ஏற்படுத்திவிட்டிருந்தார்.
திராவிடத்தின் ஆணிவேரான சமூக நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் குறைசொல்லும்படி கருணாநிதி வைக்கவில்லை என்பதே நிஜம்.
தனியார் பேருந்துகளை அரசு உடமையாக்கியது, குடிசை மாற்றுவாரியம் உருவாக்கியது, கிராமப்புறங்களுக்கு சாலை, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பங்கீடு என ஒரு பக்கம், பூம்புகார் கலைக்கூடம், தலைவர்களுக்கு சிலை, மணிமண்டபம், வள்ளுவர் கோட்டம் என வரலாற்றையும் கலையையும் செழிக்கவைத்தல் என இன்னொரு பக்கம் களைகட்டியே இருந்தது.
அணை, பாலம் என தொலைநோக்கு பார்வையிலேயே அவரின் சிந்தனை இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை ஜெமினி சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டவேண்டும் என்று நினைப்புவந்து, அதை இரண்டே ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்ததையும் மறக்கவே முடியாதது..
எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த மித மிஞ்சிய மெஜாரிட்டி அடுத்த சில ஆண்டுகளில் கருணாநிதிக்கு வேறுமாதிரியான மனமாற்றத்தை கொடுத்துவிட்டது.. தாம்தான் தலைவன், குடும்பம்தான் கட்சி என்று பயணிக்கத் தொடங்கினார். எம்ஜிஆரால் 13 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லாதபோதும் கோட்டைபோல் கட்சியை கட்டிக்காப்பாற்றிய கருணாநிதி, கட்சிக்குள் ஜனநாயகத்துக்கு விடை கொடுத்து அனுப்பியது காலத்தின் கோளாறு..
மகன்கள் மு.க.ஸ்டாலின், அழகிரி மகள் கனிமொழி, பேரன் தயாநிதி மாறன் என ஒட்டுமொத்தமாக திமுகவை பிரைவேட் லிமிடெட் ஆக்கியதன் விளைவு, மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் குட்டி குட்டி சுல்தான்களாக தங்களை தாங்களே பிரகனடப்படுத்திக்கொண்டனர்., இன்று எல்லாமே எல்லை மீறிய நிலைமை என்பது கருணாநிதி கட்சிக்கு கொடுத்த மிகப்பெரிய நன்கொடை..
ஐந்து முறை முதலமைச்சராக பதவி வகித்த கருணாநிதிக்கு எதிராக எத்தனையோ புகார்கள்… 2009ல் இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தார் என்பது உட்பட. பெரும்பாலானவை குற்றச்சாட்டுகள் வடிவில் மட்டுமே.. கருணாநிதி மேல் எத்தனையோ ஊழல் புகார்கள்.. ஆனால் ஒரு வழக்கில்கூட அவர் குற்றவாளி என்று இன்றுவரை எந்த நீதிமன்றமும் சொன்னதில்லை..
ஏழு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. இரண்டு ஆண்டுகளாக கருணாநிதி வழக்கமான செயல்பாட்டில் இல்லை.. ஆனாலும் இன்றைய அரசியல் ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சியான திமுகவையே அதிகமாய் சுற்றிச்சுற்றி வருகிறது..
கருணாநிதியால் முன்பு போல் செயல்படமுடியாவிட்டாலும், அவர் சுறுசுறுப்பாக இருந்திருந்தால் தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சி எப்போதோ வீட்டுக்கு போயிருக்கும் என்று திமுக அல்லாதவர்களே தீர்க்கமாய் சொல்கிறார்கள்.
அந்த அளவுக்கு அவரிடம் சாதுர்யம் ஏராளம், ஏராளம். இன்று ஒரு செய்தியாளர் சந்திப்பிலேயே பெரிய பெரிய பிம்பங்கள் தவிடுபொடியாகும் நிலையில், செய்தியாளர் சந்திப்பா, சட்டசபை விவாதமா, மூன்று தலைமுறைகளாய் கருணாநிதி சமாளித்துவந்த விதம் அவருக்கும் அவரின் நினைவாற்றலுக்கும் மட்டுமே உரித்தான வரம்.. எங்கே எதைக்கொண்டுவந்து கோர்ப்பார் என்றே கணிக்க முடியாது..
ஜெயலலிதாவுக்கு எதிராக 1995 இறுதியில் ரஜினி குரல் கொடுத்தபோது, அதுபற்றி செய்தியாளர் கேட்டதற்கு, கருணாநிதி அடித்த கமெண்ட் , ‘’அது எங்கேயோ கேட்ட குரல்’’.. ரஜினி படத்தின் தலைப்பை வைத்தே பதில் சூடு..
ஆமாம், இப்போதும் அதே குரல் பிரச்சினைதான், என் உயிரினும் மேலான என்று ஆரம்பித்து உடன்பிறப்புகளே என்று சொல்லும் அந்த ஒற்றை வார்த்தைக்காக ஏங்காத ஆட்களே இல்லை…
95வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆண்டில் திமுகவினர் பரவசப்பட்டு ஆனந்தக்கண்ணீர் வடிக்கும் வகையில் இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான அவரின் கம்பீரக்குரல் விரைவில் மீண்டும் ஒலிக்கட்டும்..