சென்னை
வீட்டு உபயோக எரிவாயு விலையைக் குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.91 குறைத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கின்றன. தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றுகையில் எரிவாயு சிலிண்டர் விலை பொதுவாக மாதத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை மாற்றப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ரூ. 710 ஆக இருந்த வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை சிறிது சிறிதாக விலை உயர்ந்தது. கடந்த மாதம் அது ரூ.915.50 ஆனது. நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிப்ரவரி மாதத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையை வெளியிட்டது.
இதில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. ஆனால் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.91 குறைக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,131 ஆக இருந்தது. தற்போது அது ரூ.2,040 ஆக குறைந்துள்ளது. இனி வரும் மாதத்திலும் எரிவாயு விலை குறையலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.