‘நாளை பாஜக தலைமையகத்துக்கு வருகிறேன், வேண்டுமானால் என்னைக் கைது செய்யுங்கள்’ என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து பிபவ் குமார் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவர் வரிசையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கெஜ்ரிவால்

இப்போது தனது உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ராகவ் சதா எம்.பி., அதிஷி, சௌரப் பரத்வாஜ் ஆகியோரை சிறையில் அடைப்போம் என்று பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சீர்குலைக்க பாஜக முடிவெடுத்துள்ளது. ஆனால் அவர்களின் கனவு பலிக்காது என்று கூறியுள்ளார்.

மேலும், நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்லவுள்ள, தன்னையும் மற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களையும் கைது செய்யுமாறு பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க முடியாது என்றும், அது வெறும் அரசியல் கட்சியல்ல, சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான கட்சி என்றும் டெல்லி மக்களுக்காக பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை கட்டினோம், இலவச மின்சாரம் வழங்கினோம் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம் மக்களின் இதயங்களைத் தொட்ட கட்சியை நசுக்க நினைப்பது முடியாத காரியம் என்று எச்சரித்துள்ளார்.