சென்னை
வரும் 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ பேரணி நடைபெற உள்ளது.
அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது.
கடந்த மாதம் (மார்ச்) 23-ந்தேதி,தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ஜாக்டோ-ஜியோ எதிர்பார்த்த கோரிக்கைகள் இடம்பெறவில்லை என தெரிவித்து, மாவட்ட தலைநகரங்களில், ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்றஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட தலைநகரங்களில் அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி (சனிக்கிழமை) கோரிக்கை மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.