மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் காமெடி அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த வாரம் குணால் கம்ரா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், “தில் தோ பகல் ஹை” என்ற பிரபல இந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடி ஏக்நாத் ஷிண்டேவை “காடர்” (துரோகி) என்று நக்கலடித்தார்.

அவரின் இந்த நக்கல் பேச்சை அடுத்து, அந்த நிகழ்ச்சி நடைபெற்ற மும்பையின் கர் பகுதியில் உள்ள ஹேபிடட் காமெடி கிளப்பையும், வளாகத்தில் உள்ள ஒரு ஹோட்டலையும் சிவசேனா தொண்டர்கள் சேதப்படுத்தினர்.

மேலும், இதுதொடர்பாக குணால் கம்ரா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்தில் நேற்று பங்கேற்ற சிவசேனா எம்.பி. தைர்யஷீல் மானே ​​வெறுப்புப் பேச்சை ஊக்குவிக்கும் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவரது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

கம்ராவின் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஷிண்டேவைப் பற்றி பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் “மூளை காலியாக இருக்கும் ஒரு ஜோக்கர்” என்று அவர் குறிப்பிட்டார்.

நகைச்சுவை நடிகர்கள் தனிப்பட்ட தாக்குதல்களை நாடாமல் கொள்கைகளை விமர்சிக்க அனுமதிக்கும் ஒரு கட்டமைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

“வெறுப்புப் பேச்சை ஊக்குவிக்கும் அல்லது சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் அத்தகைய தளங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.