ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில், சிங்கமுத்து, வடிவேலு உள்பட சில காமெடி நடிகர்கள் இணைந்த காமெடிகள் கொடிகட்டி பறந்தது. பின்னர் வடிவேலு, சிங்கமுத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, காமெடி கூட்டணியும் பிரிந்தது.
இந்த நிலையில், நடிகர் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவிடம் நடத்திய யுடியூப் பேட்டியின்போது, சிங்கமுத்து, வடிவேலு குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர்கள் சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிவர் வடிவேலு கடந்த மாதம் 19-ம் தேதி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ
கையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் வடிவேலுவின் புகார் கடிதம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.