மும்பை

கைச்சுவை நடிகர் கிக்கு ஷர்தா என்பவர் ஒரு நிகழ்ச்சியில் ராம் ரஹிம் போல மிமிக்ரி செய்ததால் சிறை சென்றார்,  அவருக்கு இப்போது பாராட்டுக்கள் குவிகின்றன.

பாபா ராம் ரஹிம் மெசஞ்சர் ஆஃப் காட் (இறைவனின் தூதர்) என்னும் பெயரில்  இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படம் எடுத்து அதில் அவரே நடித்திருக்கிறார்.   அவர் சங்கீத ஆல்பங்களிலும் தோன்றி பாடி இருக்கிறார்.   மும்பையில் நடந்த ஒரு திரைப்பட நிகழ்வில் நகைச்சுவை நடிகர் கிக்கு ஷர்தா,  அவரைப் போலவே பேசி மிமிக்ரி செய்து மேடையில் அசத்தி உள்ளார்.   கிக்கு ஷர்தா ஹிந்தி தொலைகாட்சி உலகில் பிரபலமானவர்.   இவருடைய காமெடி நைட்ஸ் என்னும் நிகழ்ச்சி ஹிந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி.   இந்த நிகழ்வில் அவர் சாமியார் போலவே உடை அணிந்து அவரை போலவே பெண்கள் புடை சூழ காட்சி அளித்தார்.

சாமியாரின் சீடர்கள் அவர் தங்கள் குருவை கேவலப்படுத்தியதாக சொல்லி புகார் பதிந்தனர்.   அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறை வாசத்துக்குப் பின் கிக்கு விடுதலை செய்யப்பட்டார்.    பின்பு சாமியாரின் சீடர்கள் வற்புறுத்தி அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.

அவர் சீடர்களின் தொல்லை தாங்காமல் தனது டிவிட்டர் பக்கத்தில், “நண்பர்களே, எனது நிகழ்வு யாரையும் புண்படுத்த நடத்தப்பட்டதில்லை,   நான் குர்மீத் ராம் ரஹீம்ஜி இடமும் அவருடைய சீடர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்.  எங்கும் அமைதியும் மகிழ்வும் நிலவட்டும்,” என பதிந்தார்.

அதற்கு பதிலாக ராம் ரஹிம், “நான் ஆன்லைனில் குருகுல் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தேன்.   இப்போதுதான் எனது சீடர்கள் கிக்கு மேல் நடவடிக்கை எடுத்ததை அறிந்தேன்.   அவர் மன்னிப்பு கேட்டதினால் இனி என் பக்கம் இருந்து எந்த புகாரும் வராது” என தெரிவித்திருந்தார்.

நேற்று சாமியாருக்கு பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  இதற்காக டிவிட்டரில் கவிதா கவுசிக், டிவிங்கிள் கன்னா உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டியும், வாழ்த்தியும் பதிவுகளை பதிந்து வருகின்றனர்.