டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 6வது நாளாக தொடரும் நிலையில், விவசாய சங்கத்தினர் இன்றே பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையில், டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லி வரும் விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். விவசாயிகள் மைதானத்துக்குள் செல்ல மறுப்பு தெரிவித்து, டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியில் முகாமிட்டு போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.
‘போராட்டத்தை கைவிடும்படி விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள மத்தியஅரசு, டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், இன்றே (டிசம்பர் 1) பேச்சுவார்த்தைக்கு வரலாம் என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் விவசாய சங்கங்களுக்குஅழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்யான் பவன் அரங்கில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என மந்திரி தெரிவித்துள்ளார்.