கம்போடியாவில் புலிகள் அழிந்து வருகின்றன!
கடந்த புதனன்று, இயற்கை ஆர்வலர்கள் , “கம்போடியாவில் இந்தோ-சீன புலிகள் அழிந்து வருவதாகவும், புலிகளை மீண்டும் காடுகளில் அறிமுகப்படுத்த செயல்திட்டத்தை துவங்கப் போவதாகவும் ” கூறினர்.
கம்போடியாவின் உலர் காடுகள் இந்தியசீனப் புலிகளுக்கு வீடாக இருந்தது ஆனால் புலிகள் மற்றும் அவற்றின் இரையையும் தீவிர வேட்டையாடியதனால் இந்த பெரிய பூனைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதாக WWF கூறியது. கடைசியாக 2007 ல் கிழக்கு மொண்டல்கிரி மாகாணத்தில் ஒரு புலி கேமராவில் காணப்பட்டது என்றார்.
பாதுகாப்பு குழு ஒரு அறிக்கையில் “இன்று, கம்போடியாவில் எந்த இனப்பெருக்க புலிகளும் மீதமில்லை, எனவே அவை செயல்படாமல் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.
உலகின் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக்கும் அளவிற்கு தகுதியுள்ள பெரிய காடுகள் :
புலிகளின் தொகையை புதுப்பிக்கும் ஒரு முயற்சியாக, கம்போடிய அரசு கடந்த மாதம் நாட்டின் கிழக்கில் உள்ள மொண்டல்கிரி காட்டில் உயிரினங்களை மீண்டும் அறிமுகப்படுத்த ஒரு திட்டத்தை அங்கீகரித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் விலங்குகளுக்கு பொருத்தமான வாழ்விடத்தை உருவாக்கி கொடுத்து அதை வலுவான சட்ட அமலாக்கம் மூலம் வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாக்கவும், மேலும் புலிகளின் இரையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .
“தற்போதைக்கு எங்களுக்கு இரண்டு ஆண் புலிகள் மற்றும் ஐந்து அல்லது ஆறு பெண் புலிகள் தேவை, இது ஒரு பெரிய சவாலாகும்”, என காடுகளின் நிர்வாகத்திலுள்ள வன மற்றும் பல்லுயிர் திணைக்களத்தின் இயக்குனர் கியோ ஒமாலிஸ்ஸ் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்கு அரசாங்கத்திற்கு $ 20 முதல் $ 50m வரைத் தேவைப்படும் என்றும் சிறிய எண்ணிக்கையிலான புலிகளை காடுகளில் அறிமுகப்படுத்த புலிகள் வழங்க வேண்டுமென இந்தியா, தாய்லாந்து மற்றும் மலேஷியா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறினார். இத்திட்டத்தை பாதுகாப்பு குழுக்கள் பாராட்டினர்.
“பலவீனமான சட்ட அமலாக்கத்தினால் தான் புலிகள் வேட்டையாடப்பட்டு அதன் இனம் அழிந்துபோகும் நிலை வந்துள்ளது. அரசாங்கம் இப்போது தான் நடவடிக்கை எடுக்கிறது,” என வனவிலங்கு கூட்டணியின் சுவன்னா கவுன்ட்லெட், கூறினார்.
காடழிப்பு மற்றும் வேட்டையாடிய காரணத்தினால் ஆசியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் மதிப்பீடுகளின்படி உலகளவில் வெறும் 2,154 புலிகள் தான் மீதமுள்ளது.
புலிகள் உள்ள நாடுகளான வங்காளம், பூடான், சீனா, கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மார், நேபால், ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் 2022 இல் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பதாக 2010 ல் ஒரு திட்டத்தை தொடங்கியது.
12-14 ஏப்ரல் வரை தில்லியில் 13 நாடுகளின் அதிகாரிகள் சந்தித்து இலக்குகளைப் பற்றி விவாதிக்கப் போகின்றனர்.