சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இந்த மாதம் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை ‘ஆன்லைனில்’ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லுாரிகளில் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. தற்போது இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கல்லுாரிகளில், ஏப்ரல், மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள், நேரடியாக நடத்தப்படாமல் ஆன்லைனில் நடத்தப்பட்டன.இதற்கு, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வையும் ஆன்லைனிலேயே நடத்வே தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
அதைத்தொடர்ந்து, இந்த மாதம் நடத்த உள்ள டிசம்பர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
தேர்வு நடத்தப்படும் கால அட்டவணை, பல்கலைகளின் இணைப்பு கல்லுாரிகள் வழியாக, மாணவர்களுக்கு அனுப்பப்படுவதாக, உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கல்லுாரி மாணவர்கள், தங்களின் கல்லுாரிகள் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள, பல்கலைகளின் அறிவுறுத்தல்படி, செமஸ்டர் தேர்வுகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.