விஜய் நடித்த கோக் விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ரொம்பவே பிரபலம்.
அதோடு, “கொக்க கோலா பிரவுன் கலருடா” என்ற தனது திரைப் பாடல் மூலமும் அந்த நிறுவனத்திற்கு விளம்பரம் தேடித் தந்தவர் விஜய்.
தற்போது ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள், தமிழகத்தின் வளத்தை உரிஞ்சும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு எதிராவும் வெகுண்டு எழுந்திருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்காக நடிகர்கள் நடத்திய போராட்டத்தை புறக்கணித்து, இளைஞர்கள் திரண்டு நின்ற மெரினா கடற்கரைக்குச் சென்று ஆதரவு அளித்தார் விஜய்.
அது மட்டுமல்ல.. சில காலத்துக்கு முன் வெளியான கத்தி படத்தில், விவசாயத்துக்கு ஆதரவாகவும், கோக் பெப்சி போன்ற பன்னாட்டு நிர்வாகத்துக்கு எதிராகவும் வசனம் பேசியிருந்தார்.
அதன் பிறகு, 2014ம் ஆண்டு ட்விட்டரில், “முதலில் கோக் விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதற்கு எதிராக ‘கத்தி’ படத்தில் நடித்துள்ளீர்கள். ஏன் இந்த எதிர்மறை?” என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, “மக்கள் இதே போல அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளும்போதும் கேள்வி எழுப்பினால் நான்
மகிழ்வேன்”என்று ஆத்திரத்துடன் பதில் அளித்தார் விஜய். மேலும், “ ஆம், நான் இதற்கு முன் கோக் விளம்பரத்தில் நடித்தேன். சச்சின், ஆமிர்கான் போன்ற மிகப்பெரிய பிரபலங்களும் நடித்துள்ளனர். ஆனால் நான் தற்போது அந்த பிராண்டை விளம்பரப்படுத்துவதில்லை. கத்தி கதையைக் கேட்ட போது அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது. அதை ஜீவா கதாபாத்திரம் வழியாகப் பேசியுள்ளேன். என்னோட தவறுகளைத் திருத்திக்கொள்கிற சாதாரண மனிதன்தான் நானும்.”என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், “ கோக் விளம்பரத்தில் நடித்ததை தவறு என்று விஜய் உணர்ந்துவிட்டார். அதில் நடித்தால் கிடைத்த பெரும் பணத்தை, பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு அளிப்பாரா விஜய்? இதுதான் அவர் செய்த தவறுக்கு குறைந்தபட்ச பரிகாரமமாக இருக்கும். அதை விடுத்து போராடும் மாணவர்களை சந்தித்து ஆதரவு அளிப்பது எல்லாம் கண்துடைப்பாகத்தான் இருக்கும்” என்று வலைதளங்களில் பலரும் விஜய்யை விமர்சித்து வருகிறார்கள்.