கோவை:
பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் அரங்கேறியது.
இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில். தற்போது கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக தொடர்பாக, பி.எஃப்.ஐ நிர்வாகி சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொருவர் தலைமறைவாக உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைது செய்யப்பட்ட சதாம் உசைன் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சதாம் உசைன் மீது மேலும் சில வழக்குகள் உள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காந்திபுரம் பகுதியில் நடந்த வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.