கோவை:

க்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து  ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் குடும்பத்தினருக்கு விரைந்து நீதி கிடைத்திடச் செய்ய வேண்டும் என கோவை எஸ்.பி.யிடம்  கோரிக்கை மனு கொடுத்தார்.

கடந்த சில நாட்களுக்க முன்பு  கோவை துடியலூர் அருகே ஏழு வயதுச் சிறுமி மர்மமான முறை யில் கொலை செய்யப்பட்டார். பிரேதப் பரிசோதனை முடிவில் அந்தக் குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து தனிப் படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு என்றும் அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், கோவை சென்ற  மக்கள் நீதி மய்யம் கட்தித் தலைவர் கமல்,  சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்,
காவல்துறையினர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது அதிகளவில் பேசப்பட வேண்டிய பிரச்னை. அதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
பொள்ளாச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அரசின் மெத்தனத்தைக் காட்டுகிறது.  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அது பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன்.

ஒரு பெண் குழந்தை, வீட்டிலிருந்து 20 அடி தொலைவில் கூட விளையாட முடியாத மோசமான சூழ்நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் அப்படித் தகவல் சொல்லி உள்ளூர்க்காரர்கள் காசு வாங்குவதைவிட அவமானம் வேறு ஏதுமில்லை. குற்றவாளிகளை தாங்களாகவே மக்கள் காட்டிக் கொடுக்க வேண்டும்’ என்று கமல் தெரிவித்தார்.

பின்னர் கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜனை கமல் சந்தித்தார். பாலியல் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு எஸ்.பி.யிடம் கமல் கொடுத்தார். அதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. உறுதியளித்ததாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.