சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலியாக இன்று சென்னையில் 3வதுமுறையாக இன்று மேலும் 4 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், , தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு போன்ற வற்றை வழங்கி, பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.
கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, சென்னையில் மீண்டும், கடந்த 14-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற் கொண்டு 120 முக்கிய ஆவணங்கள், இந்திய பணம் 10 லட்சம், வெளிநாடு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று 3வது முறையாக மீண்டும் சென்னை மாநகர போலீஸார் திடீரென பல்வேறு இடங்களில் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரத்தில் சாகுல் ஹமீது என்பவரது வீடு, வேப்பேரி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.எம் புஹாரி என்பவரது வீடு, ஏழு கிணறு, பிடாரியார் கோயில் தெருவில் உள்ள உமர் முக்தார் மற்றும் வி.வி.எம் தெருவில் உள்ள முகமது ஈசாக் கவுத் ஆகியோரது வீடுகளிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே, அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக சென்னை போலீஸார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.