கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் மற்றும் தமிழகஅரசுக்கு எதிராக கோவையில் 31ந்தேதி பந்த் நடைபெறும் என மாவட்ட தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட பாஜக தலைவர் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கோவை பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திறனற்ற திமுக ஆட்சியில் தீவிரவாதிகளின் சதியால் கோவையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து, கோவை மாநகர மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 31.10.22 அன்று முழு கடையடைப்பு நடத்துவதென்று தீர்மானித்து, 26.10.22 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.

கடந்த செவ்வாய்கிழமை 25.10.22 அன்று தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை Ex.IPS அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அமித் ஷா அவர்களுக்கு, கோவை வெடிகுண்டு வழக்கை தேசிய புலனாய்வு முகவை (NIA) விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். மேலும் தீவிரவாத சதி பற்றி விரிவான பேட்டியும் அரசுக்கு இந்த வழக்கை எப்படி அணுக வேண்டும் என்று சட்டபூர்வான ஆலோசனைகளும் வழங்கினார். அதுவரை உறக்க நிலையில் இருந்த காவல்துறையும், முதல்வரும் அதன் பின்னரே செயல்பட தொடங்கினர். தீவிரவாதிகள் மீது முதல்கட்டமாக தீவிரவாத செயல்களை தடுக்கும் UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாநில தலைவரின் கோரிக்கையை ஏற்றுகொண்ட மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை விசாரனைக்கு எடுத்து கொள்வதாக நேற்று 27.10.22 அன்று உத்தரவிட்டு உடனடியாக விசாரனையை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் கோவை மாநகர வியாபாரிகளும், தொழிலதிபர்களும், தொழில்முனைவோர்களும் பாஜக மாநில தலைவர் திரு.அண்ணாமலை IPS அவர்களை தொடர்புகொண்டு தற்போதைய பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு கடையடைப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி மாநில தலைவர் இன்று என்னுடனும், தேசிய செயற்குழு உறுப்பினர் திரு CP ராதாகிருஷ்ணன் அவர்களுடனும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்களுடனும் பொருளாளர் S.R.சேகர் அவர்களுடனும் மற்றும் முக்கிய தலைவர்களுடனும் உரையாடி கோயமுத்தூர் மாநகர் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதன்படி கோவை மாநகர் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவரின் அறிவுறுத்தலை ஏற்று 31.10.2022 அன்று நடைபெற இருந்த இந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு நல்கி ஆலோசனை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். காத்திருப்போம் -பொறுத்திருப்போம்”.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.