திருச்சி:
கரூர் பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தியதாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதுபோல, சில பகுதிகளில் சேவல் சண்டை போட்டி நடைபெறுவதும் வழக்கம். அதன்படி சேவலின் கால்களில் கத்தியை கட்டி, மோதலுக்கு விடுவது வழக்கம். இது சில நேரங்களில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாகவும் மாறி கொலையில் முடிந்து விடுகிறது.
இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு முதல் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பல பகுதிகளில் சேவல் சண்டைக்கு அனுமதி கேட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு சேவலின் கால்களில் கத்தி பொருத்தக் கூடாது, சேவலுக்கு மது கொடுக்கக்கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டைக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், சில பகுதிகளில் அரசு அனுமதியுடன் சேவல் சண்டை நடைபெற்று வந்த நிலையில், சில பகுதிகளில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அந்த பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்திய காவல்துறையினர், அங்கு சேவல் சண்டையை நடத்தியவர்களை கைது செய்தனர். இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 8 சேவல்கள், கத்தி, பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.