சென்னை:  வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள்  பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச போதை பொருள் கும்பலைச் சேர்ந்த  நபர்  கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. இதில் போதைபொருள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில்  கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த  விமானத்தில் வந்த பயணிகளை நூதனமாக  கண்காணித்தனர். அங்கு விமானத்தில் இருந்து இறங்கி வந்த கம்போடியாவைச் சேர்ந்த   35 வயது வாலிபர் ஒருவர், சுற்றுலா விசாவில்  , சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு திரும்பி வந்திருந்தார்.

அவரது நடத்தையில்  சந்தேகம் அடைந்த அதிகாரிகள்,  அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து தனி அறைக்கு அழைத்துச்சென்று,  அந்த வாலிபரை,  சுங்க அதிகாரிகள்   தீவிரமாக விசாரித்தனர். அவரது உடைமைகளையும் பரிசோதித்தனர்.

அப்போது அவர் உடலில், சுமார் மூன்றரை கிலோ கொகைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்தனர்.. அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என கூறப்படுகிறது.  இதையடுத்து, அந்த நபரை கைது செய்த  சுங்க அதிகாரிகள், அவரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில்,  சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் கடத்தி வந்த போதைப்பொருளை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள 2 போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கொடுப்பதற்காக எடுத்து வந்ததும் தெரிந்தது. இதுபற்றி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த  மேலும் 2 பேரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.