2004 ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரிகள் 59 இடங்களில் வெற்றி பெற்று இருந்தார்கள்.
கேரளா, மே,வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இடதுசாரிகளின் கோட்டைகளாக விளங்கின. இது தவிர பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் சில ஏரியாக்களில் வாக்கு வங்கியை வைத்திருந்தனர்.
இப்போது- காலி பெருங்காய டப்பா என்பது போல் ஆகி விட்டது –அவர்கள் நிலை.
வடக்கே பல மாநிலங்களில் ஒரு சீட்டுக்காக போராடி தோழர்கள் களைத்துப்போய்- தனித்து நிற்கும் பரிதாப சூழல்.
மே.வங்கத்தில் சில தொகுதிகளில் மட்டுமாவது உடன்பாடு வைத்துக்கொள்ளலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைசி வரை- காங்கிரசிடம் பேசி பார்த்தது. ‘முடியாது’’ என்று நிராகரித்து விடடது-காங்கிரஸ்.
பீகாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதியை தருவதாக ஆர்.ஜே.டி.வாக்கு கொடுத்திருந்தது.பெகுசாரை தொகுதியை பேசி முடித்திருந்தார்கள்.அதில் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையாவை நிறுத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால் –கடைசி நேரத்தில் காலை வாரி விட்டு விட்டது- ஆர்..ஜே.டி.இதனால் பீகாரில் தனித்து நிற்கிறது –சி.பி.ஐ. பெகுசாரையில் கன்னையாவை நிறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் திண்டோரி மக்களவை தொகுதியை சி.பி.எம்.கட்சிக்கு தருவதாக சொல்லி இருந்தது- தேசிய வாத காங்கிரஸ்.இப்போது அந்த தொகுதியில் தனது வேட்பாளரை நிறுத்தி விட்டார்-சரத்பவார்.
வடக்கு கை விட்டுப்போன நிலையில் –தெற்கே -ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே இடதுசாரிகள் . உடன்பாடு கண்டுள்ளனர்.
ஆந்திராவில் நடிகர் பவன்கல்யானுடன் கூட்டணி.தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன்.கேரளாவில் வழக்கமான கட்சிகளுடன் உறவு.
—பாப்பாங்குளம் பாரதி