சென்னை: மதுரை பாஜக கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதுபோல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா?  என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், அதிமுக முன்னாள் அமைச்சர் உதயக்குமார் மழுப்பலாக பதில் கூறினார்.

2026ல் நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றும், “2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வீட்டிற்கு போகும் என்றும்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழ்நாட்டில் அணுகுண்டு விழுந்ததை போல் திமுக ஆட்சி அமைந்துள்ளது.

பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சியில் இதுவரை 7,000 கொலைகள் நடைபெற்றுள்ளன. 2021 – 26 திமுக ஆட்சி காலம் மிக மோசமான ஆட்சி காலம் என்பது மக்களின் நீங்கா நினைவாக அமையும்.

சோழர் காலம் பொற்காலம் என சொல்வது போல் ஸ்டாலின் காலம் வேதனையின் காலம் என மக்களின் மனதில் என்றும் நினைவில் இருக்கும். தனி நபர் வளராத நிலையில் தமிழ் சமுதாயம் வளர்ந்து விட்டது என சொல்வது சுத்த பொய். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் அரக்கோணம் பெண் வரை பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி. யார் குழப்பம் ஏற்படுத்த முயன்றாலும் அது நடக்காது என்றார்.

அடுத்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு வீட்டுக்கு போகும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டனர். எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும், எத்தனை திசை மாற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள், எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்கள் குழப்பமின்றி தெளிவாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என கூறியிருந்தாரே என செய்தியாளர்கள்கேள்வி எழுப்பினர். அதற்கு மழுப்பலாக பதில் கூறிய ஆர்.பி.உதயகுமார் , கூட்டணியில், எத்தனை குழப்பங்கள் ஏற்படுத்தினாலும், எத்தனை எத்தனை திசை திருப்பினாலும் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள். ஆனால் யாருடைய அழுத்தத்தாலோ தெளிவு இல்லாதது போல கேள்வி கேட்கிறீர்கள். கேள்வி கேட்பதும், கேட்க சொல்பவர்களும், அழுத்தம் கொடுப்பவர்களும் வேண்டுமானால் தெளிவில்லாமல் இருக்கலாம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும். இப்போது உள்ள முதலமைச்சர் வீட்டுக்கு போக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அவர் கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் ஆர்.பி. உதயகுமார் சென்றது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.