டெல்லி: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, தமிழகம் உள்பட 4 மாநில அதிகாரிகளுடன் மத்திய மின்துறை அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக இன்று அமைச்சர் அமித்ஷா நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய மின்சக்தி துறை அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகம், பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்த தமிழக முதல்வர் அதிக அளவில் நிலக்கரி ஒதுக்க மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் மின்துறை அதிகாரிகளுடன் மத்திய மின் சக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்றும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளை தவிர மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின் போது, 7ஆயிரத்து 150 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்படுவது தொடர்பாகவும், மே மாதத்துக்கான மின்தேவை சராசரியை விட 220ஜிகாவாட் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தற்போது செயல்படாமல் ஆனால் நல்ல நிலையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உடனடியாக மின் உற்பத்தியை தொடங்கவும், தனியார்களிடமிருந்து மின்சாரம் வாங்குவது மற்றும் நிலக்கரி இறக்குமதி தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக நிலக்கரி தட்டுப்பாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. அதில், . நிலக்கரி உற்பத்தி, விநியோகம், இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.