சென்னை: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் மற்றும் மறுதிறப்புத் தேதிகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் முடிவாகாத காரணத்தால், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மையங்களின் வணிகம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலால், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் தற்போது முடங்கியுள்ளன. அடுத்தது என்ன என்ற தகவல்களே இன்னும் புலப்படவில்லை. எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டுமென்ற விருப்பத்தைக் கொண்டிருக்கும் மாணாக்கர்கள் பலர், தங்களின் திட்டத்தை அடுத்த ஓராண்டிற்கு ஒத்திவைத்துள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழலில் தங்களால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதில் கவனம் செலுத்த முடியாது என்கின்றனர் அவர்கள்.
பெரும்பாலான போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்தே மாணாக்கர்களைப் பெறுகின்றன. ஏற்கனவே பணிபுரியும் நபர்கள் குறைந்தளவிலேயே சேர்கின்றனர்.
நிலைமை அவ்வாறாக இருக்கையில், தற்போதைய உயர்கல்வி நிறுவன செயல்பாடுகள் தொடர்பான குழப்ப நிலையால், போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் வருவாய் பெருமளவில் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.