தங்கம் வெள்ளி வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களை முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி அடுத்து 2024 ல் பாரிஸ் நகரில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இளைஞர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் இவர்களின் உழைப்பும் பயிற்சியாளர்கள் பற்றிய விவரமும் நம்மை வியக்க வைத்திருப்பதுடன், வரும் ஆண்டுகளில் இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள செய்யவேண்டிய முயற்சிகள் மலைக்க வைக்கிறது.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உலகின் முன்னணி ஈட்டி எறியும் வீரரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவருமான உவ ஹோன் என்பவரிடம் 2018 ம் ஆண்டு முதல் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

நீரஜ் சோப்ரா – உவ ஹோன்

100 மீட்டரைத் தாண்டி ஈட்டி எறிந்த ஒரே நபர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான உவ ஹோன் 1984 ம் ஆண்டு ஏற்படுத்திய சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை, இவர் வீசிய தூரம் 104.80 மீட்டர்.

இவருடன் ஜெர்மனியின் ஈட்டி எறியும் வீரர்களைப் பயிற்றுவிக்கத் தேவையான கருவிகளை வடிவமைத்த குழுவில் இடம்பெற்றவரான டாக்டர் பார்டோனிட்ஸ் என்பவரும் 2019 ம் ஆண்டு முதல் இணைந்து நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்தனர்.

ஈட்டி எறியும் வீரரின் உடல் வில் போலவும் அவர் எறியும் ஈட்டி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போலவும் இருக்கவேண்டும் என்று கூறும் டாக்டர் பார்டோனிட்ஸ், நீரஜ் சோப்ரா தன்னை முழுமையாக அதற்காக தயார்படுத்திக் கொண்டார் என்று கூறுகிறார்.

உவ ஹோன் மற்றும் டாக்டர் பார்டோனிட்ஸ் ஆகிய இருவரும் இதற்கு முன் சீனாவின் தேசிய அணிக்கு பயிற்சி அளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர பதக்கம் வென்ற மற்ற இந்திய விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள் பற்றிய விவரங்களைச் சுருக்கமாக பார்க்கலாம் :

மீராபாய் சானு

பயிற்சியாளர் : விஜய் சர்மா (தலைமைப் பயிற்சியாளர் – இந்தியா)
பயிற்சியாளரின் நாடு : இந்தியா
விளையாட்டு : பளுதூக்குதல் 49 கி எடை பிரிவு
பதக்கம் : வெள்ளி

ரவி டாஹியா

பயிற்சியாளர் : கமல் மலிகோவ்
பயிற்சியாளரின் நாடு : ரஷ்யா
விளையாட்டு : மல்யுத்தம் 57 கி எடை பிரிவு
பதக்கம் : வெள்ளி

பஜ்ரங் புனியா

பயிற்சியாளர் : ஷாக்கோ பென்டினிடிஸ்
பயிற்சியாளரின் நாடு : ஜார்ஜியா
விளையாட்டு : மல்யுத்தம் 65 கி எடை பிரிவு
பதக்கம் : வெண்கலம்

லோவ்லினா போர்கோஹேன்

பயிற்சியாளர் : ராஃபேல் பெர்கமாஸ்கோ
பயிற்சியாளரின் நாடு : இத்தாலி
விளையாட்டு : குத்துச் சண்டை பெண்கள் பிரிவு
பதக்கம் : வெண்கலம்

பி.வி. சிந்து

பயிற்சியாளர் : பார்க் டே-சங்
பயிற்சியாளரின் நாடு : தென் கொரியா
விளையாட்டு : பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு
பதக்கம் : வெண்கலம்

இந்திய ஆடவர் ஹாக்கி அணி

பயிற்சியாளர் : கிரஹாம் ரீட்
பயிற்சியாளரின் நாடு : ஆஸ்திரேலியா
விளையாட்டு : ஆண்கள் ஹாக்கி
பதக்கம் : வெண்கலம்

மேற்கண்ட 7 வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் ஒரு இந்தியப் பயிற்சியாளரும் இந்திய அணி ஏழு பதக்கங்களை வெல்ல காரணமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.