சென்னை:

மிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் நகை கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று கூட்டுறவு துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. கூட்டுறவு, உணவு துறை மானியக்கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து  பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு  தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் நகை கடன் தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.10 லட்சம் ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவுஅமைப்புகள்தான் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளதாகவும், கடந்த, 2011-ம் ஆண்டு முதல் கடந்த மாதம் 22-ம் தேதிவரை 82 லட்சத்து 7,234 விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 152 கோடியே 38 லட்சத்துக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கியுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கிகளின், 248 கிளைகள் உட்பட 622 கூட்டுறவு நிறுவனங்களை ரூ.72 கோடியே 86 லட்சம் செலவில் குளிர் சாதன வசதியுடன், நவீனமயமாக்கியுள்ளது.

தேவை ஏற்படும் இடங்களில், அம்மா மருந்தகங்கள் புதிதாகத் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் உள்ள தகவல்:

தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 57.36 லட்சம் மதிப்பீட்டில் மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்படும்.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக் கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஏற்கெனவே வீட்டு வசதிக் கடன் ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கியது போல் தற்போது தனிநபர் நகை கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

27 கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக கட்டிடங்கள் ரூ.2.71 கோடியில் விரிவாக்கப்படும்.

5 மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.1.20 கோடியில் 7 புதிய கிளைகள் தொடங்கப்படும்.

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் உள்கட்டமைப்பு ரூ.7.37 கோடியில் மேம்படுத்துதல் உட்பட மொத்தம் 15 அறிவிப்புகளை வெளியிட்டார்.

2018-19ம் ஆண்டில் 12,37,393 விவசாயிகளுக்கு ரூ. 8,127.68 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டில் 10,63,821 விவசாயிகளுக்கு ரூ. 6,220.27 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டது.

2019-20ம் ஆண்டில் ரூ.10,000 கோடி பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயித்துள்ளது.

இதற்கென விவசாயிகளுக்கு வட்டி மானியம் மற்றும் வட்டி ஊக்கத் தொகையாக ரூ. 200 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.