சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அரும்பாக்கம் மெட்ரோ அருகே பல மாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. நிலப் பயன்பாட்டை அதிகரித்து  வருவாய் ஈட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்  என்று தெரிவித்துள்ளது.

சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில், தற்போது புறநகர் வரை செல்லும் வகையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக,  அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில், பிரம்மாண்டமான  வணிக வளாகம் அமைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பல மாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. நிலப் பயன்பாட்டை அதிகரித்து, பயணக் கட்டணம் அல்லாத வகையில் வருவாய் ஈட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கட்டிடம் 100-அடி சாலையில் உள்ள தற்போதைய வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் அமையவுள்ளது. இதில், ஒரு அடித்தளம், 4 அடுக்கு இயந்திர நிறுத்தும் வசதியுடன் கூடிய தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்கள் இருக்கும் என CMRL அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள்,  அரும்பாக்கம் ரயில் நிலைய வளாகத்தில், கட்ட  திட்டமிட்டுள்ள 7 தளங்களில், 4 தளங்கள் சில்லறை மற்றும் உணவுக் கடைகளுக்கான வணிகப் பகுதிகளாகவும், மீதமுள்ள 3 தளங்கள் அலுவலகங்களாகவும் பயன்படுத்த  திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்,  இதன் மூலம், மெட்ரோ நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும் ஷாப்பிங், உணவு மற்றும் அலுவலகப் பணிகளுக்கான வசதிகள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

இத்திட்டத்திற்கான டெண்டர்களை CMRL வெளியிட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்திற்கு கட்டுமானப் பணிகளை முடிக்க சுமார் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும்.

இதேபோன்ற திட்டங்கள் ஏற்கனவே ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் சைதாப்பேட்டை மெட்ரோ நிலையங்களில் செயல்பட்டு வருவதால், இந்த புதிய திட்டமும் சென்னை மெட்ரோவின் வருவாய் ஈட்டும் உத்திகளில் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நகரின் முக்கியப் பகுதிகளில் வணிக மற்றும் அலுவலகச் செயல்பாடுகளை ஊக்குவித்து, ஒரு மாற்று வருவாய் மாதிரியை உருவாக்குவதிலும் CMRL ஒரு முன்னோடியாக திகழ்கிறது.

கோயம்பேடு மெட்ரோ நிலையம் அருகே அமையவுள்ள இந்த வணிக வளாகம், சென்னை மாநகரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.