சென்னை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில்  ரூ.22,000 கோடியில் அமையவுள்ள  மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து  மத்தியஅரசு எழுப்பிய  கேள்விகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரிவான விளக்கங்களை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் மத்தியஅரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 ரூ. 22,000 கோடியில் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு  மெட்ரோ  ரயில் திட்டங்களை செயல்படுத்த  தமிழ்நாடு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதிக்காக மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்   குறித்த மத்திய அரசின்  சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு CMRL விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, மொத்தம் 31.9 கிமீ  தொலைவு உள்ள மதுரை மெட்ரோவில் 5 கிமீ நிலத்தடி பாதையும், ரூ.11,300 கோடி செலவாகும் என்றும்,   34.5 கிமீ கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 10,700 கோடியும் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டு நகரங்களும் ஒரு மணி நேரத்திற்கு 11,000-15,000 பயணிகளின் பயணம் செய்வார்கள் என்றும் கணிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன்,  சென்னை மெட்ரோவின் தினசரிப் பயணிகளின் எண்ணிக்கை 3.2 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன், நாடு முழுவதும் அதிகரித்து வரும் வாகன வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதிலும் நேரத்தைச் சேமிப்பதிலும் மெட்ரோ ரயில் சிறப்பாக பங்காற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 மத்திய அரசின் ஒப்புதலை பெற்றதுடன்,  மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவில் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே வழங்கி உள்ளது.

மதுரை திட்ட அறிக்கை 936 பக்கத்திலும், கோவை திட்ட அறிக்கை 655 பக்கத்திலும் இடம்பெற்றுள்ளன. ரயில் நிலை வகைகள், செலவுகள், செயல்படுத்தும் முறைகள், ரயில் நிலைய அமைவிடங்கள் உள்ளிட்ட விபரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

மதுரையில் திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளது. 27 கி.மீ. உயர்மட்டப்பாதையில் 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ. சுரங்கப்பாதையில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

கோவையில் 39 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் உயர்மட்டப்பாதையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது. 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய விருப்பம் தெரிவித்துள்ள, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் ஏற்கனவே  மதுரை மற்றும் கோவைக்கு அண்மையில் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.  அவர்களிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தவுள்ள இடங்களை காண்பித்து விவரித்தனர்.

இதைத் தொடர்ந்து, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து வரும், மத்தியஅரசு, அதுகுறித்து சில சந்தேகங்களை எழுப்பி உள்ளது.  அதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதன் காரணமாக விரைவில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.  இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை படிப்படியாக தொடங்க திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.