வேலூர்: இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவ வாய்ப்பு இல்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரும், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் வைரலாஜி துறை பேராசிரியரான டாக்டர் ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார்.
சீனவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, 3ம் அலை என உலக நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. இதுவரை மூன்று அலைகளாக பரவி இந்திய மக்களையும் வாட்டி வதைத்துள்ளது. இதுவரை நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டி உள்ளது.
இந்த நிலையில், கொரோனா 3வது அலை இந்தியாவில் முடிவுக்கு வந்துவிட்டதாக சிஎம்சி மருத்துவமனையின் வைராலஜி துறை பேராசிரியரும், மூத்த மருத்துவ நிபுணரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.
கொரோனா 4வது அலை ஜூன் மாதம் பரவ வாய்ப்பு உள்ளதாக ஐஐடி ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், கொரோனா 4வது அலை பரவும், பரவாது என விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மருத்துவர் ஜேக்கப் ஜான் கொரோனா 4ம் அலை இந்தியாவில் ஏற்படாது என உறுதியாக தெரிவித்து உள்ளார்.