பெங்களூரு: கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் கர்நாடகாவில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடியூரப்பா கூறியதாவது:

பிரிட்டனில் பரவும் புதிய வகையான கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, இன்றிலிருந்து வரும் 2ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்றார்.

சுகாதார அமைச்சர் சுதாகர் கூறியதாவது: பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரசை, மாநிலத்தில் பரவாமல் தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மக்கள் மாநிலத்திற்குள் பயணிக்க தடையில்லை. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார்.