சென்னை: தலைநகர் சென்னையில், சென்னை இலக்கியத் திருவிழாவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அங்கு உரையாற்றியபோது, தமிழர்களுடைய நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு என கூறினார்.
சென்னை இலக்கியத் திருவிழா இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. இதில், படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என 4 அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடவுள்ளனர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
இந்த இலக்கியத் திருவிழாவின் தொடக்க இன்று காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக இலக்கிய திருவிழாவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 6 மருத்துவப்படிப்பு நூல்களையும் 108 புத்தகங்களையும் முதல்வர் வெளியிட்டார்.
அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மதத்தாலும், சாதியாலும் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போதெல்லாம் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒற்றை வரி மனிதர்களை ஒன்றாக்கிவிடும் என்றவர், தமிழ் மொழியை அறிவாலும், உணர்வாலும் வளர்க்க வேண்டும். மொழியை காக்க உயிரை கொடுத்த இனம் தமிழ் இனம்
மேலும், திமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் சென்னை கடற்கரையில் தமிழ் புலவர்களுக்கு சிலைகள் அமைக்கப்பட்டன. திமுக ஆட்சி எப்போதுமே தமிழ் ஆட்சி தான். தமிழுக்காகவே நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம்.
திமுகவின் ஆட்சி காலம் அப்போதும் தமிழ் ஆட்சி காலம் தான். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்றார். , தமிழ் மொழி மாநாடு திமுக ஆட்சியில் தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்று தந்தவர் கலைஞர்.
இன்று பள்ளி கல்வி முதல் கல்லூரி கல்வி வரை தமிழில் படிக்கலாம். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டு தமிழர்களுடைய நிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு என்றார். மேலும் இலக்கிய திருவிழா மாவட்டந்தோறும் நடைபெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.