சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தரமணியில் ரூ. 40 கோடி செலவில் கட்டப்பட உள்ள தமிழ் அறிவு வளாகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

கடந்த 1994ம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளையும் இந்நூலகம் மேற்கொண்டு வருகிறது.
இந்த பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்குடன், தமிழ் அறிவு வளாகத்தை உருவாக்கும் வகையில் சென்னை, தரமணியில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் 30,000 சதுர அடி நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுத் தலமாகச் செயல்படவிருக்கும் ‘தமிழ் அறிவு வளாகம்’ கட்டுமான பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், மரியம் ராம், ராமசந்திரன், இந்திரன், சுந்தர் கணேசன், கட்டட வடிவமைப்பாளர் ராஜேந்திரன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் திட்டப்பணி இயக்குநர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.