நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குமரி முனையில் கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் 25வது வெள்ளிவிழிவை முன்னிட்டு, இரண்டு நாள் விழாவாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி, கடலுக்குள் திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் எளிதாக காணும் வகையில், கடலுக்குள் உள்ள விவேகாந்தர் சிலைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழையினால் ஆன அமைக்கப்பட்டுள்ள பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து, இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக இன்று,   திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியீடு, ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற நூலின் புதிய பதிப்பு வெளியீடு, திருவள்ளுவர் பசுமை பூங்கா, திருக்குறள் கண்காட்சி திறப்பு விழா, திருவள்ளுவர் அலங்கார தோரண வாயில் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து படகு மூலம் திருவள்ளூர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது அவரை பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும்-விவேகானந்தர் பாறைக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக, நேற்று மாலை 5 மணி அளவில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் ‘விவேகானந்தா’ படகில், கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறைக்கு சென்றார். அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். சிலையின் நுழைவுவாயிலில் ‘பேரறிவு சிலை’ (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தின் வழியே விவேகானந்தர் பாறை வரை நடந்து சென்ற முதல்வர், மீண்டும் பாலம் வழியாக திருவள்ளுவர் பாறைக்கு திரும்பினார்.  முதலமைச்சருடன், அமைச்சர்கள், பிரமுகர்களும் உடன் சென்றனர்.

பின்னர், திருவள்ளுவரின் பாதத்தில் முதல்வர் மலர் தூவி வணங்கினார். அங்கிருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் கடலின் இயற்கை அழகை ரசித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

சிலையின் பீடம் அருகே நடந்த நிகழ்ச்சியில், திருக்குறள் அறநெறியை பரப்பி வரும் 25 தமிழ் ஆர்வலர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.

தொடர்ந்து,  மாலை 6 மணி அளவில் கரை திரும்பிய முதல்வர், பூம்புகார் போக்குவரத்து கழக வளாகத்தில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ள திருவள்ளுவர் மணல் சிற்பத்தை பார்வையிட்டார்.

படகு இல்ல வளாகத்தில் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளிக்காட்சியை திறந்து வைத்தார். இரவு 7 மணி அளவில், கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகை அருகே சுகிசிவம் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தை கேட்டு ரசித்தார்.

துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ராசா,தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் திரளானோர் பங்கேற்றனர். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய முதல்வர், இன்று நடைபெறும் 2-வது நாள் விழாவில் பங்கேற்கிறார்.

கன்னியாகுமரியில் கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக சிலை புனரமைப்பு செய்யப்பட்டது. மேலும் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே இதுபோன்ற ஒரு பாலம் அமைக்கப்படுவது இந்தியாவிலேயே முதன் முறை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்வில் திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பரிசுகளை அவர் வழங்கினார். பின்னர் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மவர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பூம்புகார் கைவினைப் பொருட்கள் அங்காடியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Kumari TVLR Statue function 30-12-24-03