சென்னை: இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும்  தமிழ் மக்களுக்கு உதவ மத்தியஅரசின் அனுமதி கோரி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். ஓபிஎஸ் தனது குடும்ப நிதியாக ரூ.50 லட்சம் தருவதாக கூறினார். இதைத்தொடர்ந்து,  தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஏற்கனவே, இலங்கைக்கு ரூ.7,600 கோடி வழங்குவதாக நிதி உதவிகள் அறிவித்த மத்திய அரசு, அரிசி, டீசல் உள்ளிட்ட பொருட்களை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது. இவைகள் விரைவில் தீர்து விடும் சூழலில்,  இலங்கை மீண்டும் கடனுதவி கேட்டு கோரிக்கை விடுத்த நிலையில்,இலங்கைக்கு மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் பசி பட்டினி மற்றும் மருத்துவ வசதியின்றி வாடும் தமிழக மக்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவிப் பொருட்களை  அங்கு அனுப்பி வைக்க மத்தியஅரசிடம் தமிழக முதல்வர் அனுமதி கோரி வருகிறார். இதுவரை மத்தியஅரசு இதற்கு செவிசாய்க்காத நிலையில்,  இன்று சட்டப்பேரவையில்,  மத்திய அரசின் அனுமதி கோரி,  தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய  முதல்வர்  மு.க. ஸ்டாலின்  இலங்கைக்கு உதவ, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதி கேட்டும் இதுவரை பதில் வரவில்லை. தமிழகத்திலிருந்து ரூ.25 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டும் என்பதே விருப்பம்.

இலங்கை மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். இலங்கை முழுவதும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், இலங்கைக்கு ரூ.80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.15 கோடியில் பால் பொருட்களை நாம் வழங்க நினைக்கிறோம். இதை நாம் நேரடியாக வழங்க முடியாது; ஒன்றிய அரசின் அனுமதியோடுதான் அனுப்ப முடியும். இலங்கைக்கு பொருட்கள் அனுப்புவது குறித்து பிரதமர் மோடியிடம் பேசி இருக்கிறோம். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

காலச்சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழித்து எங்கோ கொண்டுபோய் நிறுத்திவிட்டது. அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது. எனவே, கட்சி எல்லைகளை கடந்து, கருணை உள்ளத்துடன் அனைவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுகிறேன் என தெரிவித்தார்.

இதையடுத்து, பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்த இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததை அடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

இதனிடையே, இந்த தீர்மானம் மீது பேசிய ஓபிஎஸ், மனிதநேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது முதலமைச்சரின் தனித்தீர்மானம் விளங்குகின்றது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட முறையில் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளேன் என தெரிவித்தார். இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு விண்ணைத்தொடும் அளவிற்கு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அரசு கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஆதரிக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கூறினார். இதன்பின் பேசிய முதல்வர்,  சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்க முன்வந்துள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து  தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள்.