சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லியில் யுஜிசி நெறிமுறைகளை எதிர்த்த குரல் ஒலி  இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி எம்.பி., துரை வைகோ எம்.பி. உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில்,

“யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் எங்கள் திமுக  மாணவரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் குரல்களை வலுப்படுத்தி கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாத்ததற்காக என் அன்பான சகோதரர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனிப்பட்ட அடையாளத்தை திணிப்பதற்காக பல்வேறு வரலாறுகள், மரபுகள் மற்றும் மொழிகளை அழிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் அஜண்டா என்பது தெளிவாக தெரிகிறது.

ராகுல்காந்தி சொன்னது போல், யுஜிசி வரைவு வெறும் கல்விக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல தமிழகத்தின் வளமான பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகவும்  உள்ளது.

நீட் தேர்வு தொடங்கி சிஏஏ,  வேளாண் சட்டங்கள் வரை, நமது அரசியலமைப்பு மற்றும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு போராட்டத்திற்கும் திமுக தலைமை தாங்கியுள்ளது. இன்று, டெல்லியில் ஒலித்த  குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்”

எனப் பதிவிட்டுள்ளார்