டில்லி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அப்பல்லோ மருத்துவமனை வந்தார்.
கடந்த மாதம் 22ந்தேதி நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. கடந்த 15 நாட்களாகியும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு அமெரிக்க மருத்துவர் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு மற்றும் அப்பல்லோ மருத்துவ குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இன்று காலை 11.15 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தார் ராகுல் காந்தி.
சென்னைக்கு வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விமான நிலையம் சென்று வரவேற்றனர்.
அதையடுத்து ராகுல் , முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவ மனைக்கு சென்றார்.
அங்கு இரண்டாவது மாடிக்கு சென்ற அவர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேரடியாக சந்தித்து கேட்டறிந்தார். அவருக்கு மருத்துவர்கள் குழு முதல்வரின் சிகிச்சை குறித்து விவரமாக எடுத்து கூறினயது.
அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் மருத்துமனைக்கு வந்திருந்தார்.
ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சுமார் 40 நிமிடங்கள் மருத்துவமனைக்குள் இருந்த ராகுல்காந்தி, மருத்துவமனைக்கு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், அன்னை சோனியாகாந்தியின் ஆதரவையும், ஆறுதலையும் தெரிவிக்கவே நான் சென்னை வந்தேன்.
முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய சென்னை வந்தேன்
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்
முதல்வர் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சர் விரைவில் குணமடைவார் என்று தெரிவித்த ராகுல், பூரண நலம் பெறவும் வாழ்த்தினார்.
சில நொடிகள் மட்டும் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல்,
இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறிவிட்டு அப்பல்லோவிலிருந்து புறப்பட்டார்.
மற்ற தலைவர்கள் கூறுவதுபோல, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த ராகுல்கா ந்தியும் ஜெயலலிதாவை நேரடியாக காணாமல், மருத்துவக்குழுவினரிடம் மட்டுமே விசாரித்து ‘கிளிப்பிள்ளை’ சொல்வது போல ‘முதல்வர் நலமாக இருக்கிறார்’ என்று மட்டுமே கூறிவிட்டு செல்வது வியப்பை அளிக்கிறது.
Photo courtesy: anbalagan veerappan