திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பிரனராயி விஜயனின் மகள் சம்பந்தப்பட்ட ரூ.1.72 கோடி ஊழலை, ஆர்டிஐ தகவல் மூலம் மக்களுக்கு அம்பலப்படுத்திய பிரபல சமூக ஆர்வலர் கிரீஷ் பாபு கொச்சியில் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பல ஊழல் வழக்குகளில் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்ட பிரபல சமூக மற்றும் தகவல் அறியும் உரிமைச் (ஆர்டிஐ) ஆர்வலரான கிரீஷ் பாபு (வயது 45), கொச்சியின் களமசேரி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இவர் கேரளா முதலமைச்சரின் மகள்மீதான ஊழல் உள்பட பல வழக்குகளில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இவர் கடந்த 18ந்தேதி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். காலையில் சுமார் 6:45 மணியளவில் அவரை எழுப்ப சென்ற அவரது மனைவி, பாபு பதிலளிக்கவில்லை. அவர் உறங்கிக் கொண்டிருந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரைக் கொண்டு கதவை உடைத்து பிர்த்தனர். அப்போது, அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
ஆர்டிஐ சமூக ஆர்வலர் கிரீஷ் பாபு சமீபத்தில் கேரள முதல்வரின் மகள் சம்பந்தப்பட்ட ரூ.1.72 கோடி ஊழலைஅம்பலப்படுத்தினார். வீனா விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளும், கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கிரீஷ் பாபு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவலின்படி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா, எந்த வேலையும் செய்யாமல் ஐடி நிறுவனத்தில் இருந்து ரூ. 1.72 கோடி பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வீணா விஜயன் மீதான முறைகேடு மற்றும் ‘மாதாந்திர பணம்’ வழக்கு குறித்து விஜிலென்ஸ் விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற சுரங்க நிறுவனத்திற்கும், முதல்வர் பினராயி விஜயனின் மகளும், தொழிலதிபருமான வீணா டிக்கும் இடையே விவரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்து விஜிலென்ஸ் விசாரணை கோரி பாபு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை மூவாட்டுப்புழா விஜிலென்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த நிலையில் கிரிஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே வீணா மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீணா மற்றும் எக்ஸாலாஜிக் டு மூலம் மொத்தம் ரூ.1.72 கோடி பெறப்பட்டதாகவும், மாதா மாதாம் பணி செய்யாமலேயே பணம் பெற்றுள்ளதாகவும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.