சென்னை

திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மொரணப்பள்ளி கிராமத்தில், ஓசூர் மாநகராட்சியால் ரூ. 30.00 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை (நிலை) எண். 173, நாள் 08.12.2022-ல் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது.

தரைத்தளம் வரையிலான கட்டுமானத்திற்கான இந்த அனுமதியின் அடிப்படையில் பணிகள் தற்போது முன்னேற்றத்தில் உள்ளன.  இது பெங்களூரு நகரத்திற்கு அருகிலான அமைவிடம் உள்ளிட்ட காரணங்களால் இப்புதிய பேருந்து நிலையத்தில் அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளின் போக்குவரத்து எதிர்பார்க்கப்படுவதால், கட்டப்பட்டு வரும் இப்புதிய பேருந்து நிலையத்தில் தேவைப்படும் கூடுதல் வசதிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.18.20 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.

இதைப் போல் திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இது சுமார் 30,849 சதுரடி பரப்பளவிலான இரண்டு பேருந்து நடைமேடைகளுடன் 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன் 37 எண்ணிக்கையிலான இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்களுடன் மற்றும் 45 எண்ணிக்கையிலான காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களுடன் மொத்தம் 1,42,945 சதுரடி பரப்பளவில்  அமையவுள்ளது. தமிழக முதல்வர் மூலதன மானிய நிதி – இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்.