சென்னை

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார்.

திமுக மதுரை மாநகராட்சி தேர்தலில் 67 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில் மதுரை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிபாரிசு அடிப்படையில் 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி மேயரானார். அதிலிருந்து நிழல் மேயராக, மேயரின் கணவராக பொன் வசந்தே செயல்படுகிறார் என்றும், மாநகராட்சி நிர்வாகத்தில் அவரே முடிவெடுக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி தி.மு.க-வினரும் புகார் எழுப்பி வந்தனர்.

இதையொட்டி பலமுறை மாமன்றக் கூட்டங்களில் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது. கடந்த மே மாதம் மதுரை மேயரின் பொன்வசந்த் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கட்சி தலைமை அறிவித்தது.

தற்போது மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“முதலமைச்சர் அதிரடி-

மதுரை மாநகரில் மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் உத்தரவு.

கட்சி நிர்வாகிகளுடனான ஒன் டூ- ஒன் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின் போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.