சென்னை
தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று முதல் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறு, தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,
”தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சியே போதும் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. தமிழ்நாட்டுக்கு இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நகரத்தில் மட்டும் வளர்ச்சி குவியக்கூடாது; அனைத்து பகுதிகளும் சமச்சீராக வளர வேண்டும்.
தமிழ் மென்பொருட்களை உருவாக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். எந்த புதுமை வந்தாலும் அதை முயன்று பார்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சைபர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கென கொள்கை ஏற்படுத்தினோம். 2021-ல் 14,927 இ-சேவை மையங்கள் இருந்த நிலையில் 2024-ல் 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னையில் பூங்காக்கள் உள்ளிட்ட 1,204 இடங்களில் இலவச வைபை மையங்களை நிறுவியிருக்கிறோம்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் குறையாது, பெருகத்தான் செய்யும். இன்று நாம் அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகத்தான் இருக்கும். குற்றங்களை கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை வலுப்படுத்த வேண்டும்”
எனக் கூறியுள்ளார்.