தேனி: மக்களவை தேர்தல் பிரசாரத்தையொட்டி, தேனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை,  அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து  நடைபயணம் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததுடன், எப்போதும் போல அங்கிருந்த டீக் கடைக்கு சென்று டீ குடித்தார்.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம்  முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தற்போது தேனியில் முகாமிட்டு, திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று காலை நடைபயணத்தின்போது,   அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.  அங்கிருந்த பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். அங்குள்ள பாரடஸ் ரோடு, உழவர் சந்தை பகுதியில் ஸ்டாலின் நடைபயணத்தை கண்ட அந்த பகுதி மக்கள்   முதலமைச்சரோடு  செல்ஃபி எடுத்தும், அவரை நலம் விசாரிக்கவும் செய்தனர். மேலும் தேநீர் கடைக்கு சென்று அங்கு உள்ள மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.